இயேசுவின் பரலோக ராஜ்ய உவமைகள்

மத்தேயு 13

விதைப்பவர் உவமை

1. இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2. திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.
3. அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.
6. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

உவமைகளின் நோக்கம்

10. அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
12. உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13. அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.
14. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
15. இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
16. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17. அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

விதைக்கிறவனைப் பற்றிய உவமைகள்

18. ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
19. ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
20. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்;
21. ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
22. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.
23. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

நிலத்தில் விதைத்த விதைகளும் களைகளும்

24. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
25. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். 26. பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
27. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28. அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
29. அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.
30. அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.

கடுகு விதை, புளித்தமா உவமைகள்

31. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32. அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
33. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.

ஜனங்களோடு உவமைகளாய்ப் பேசுதல்

34. இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.
35. என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

நிலத்தின் களைகளைப் பற்றி உவமை

36. அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.
37. அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்;
38. நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
40. ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
41. மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து,
42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
43. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

புதைத்திருக்கிற பொக்கிஷம்

44. அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.

நல்லமுத்துக்கள் உவமை

45. மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.

வலை உவமை

47. அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
48. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.
49. இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
50. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

பரலோகராஜ்யத்தின் அழைப்பு

51. பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள். 52. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

தாம் வளர்ந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்

53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு,
54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
56. இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57. அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
58. அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

மத்தேயு 20

திராட்சத்தோட்ட வேலையாட்கள் உவமை

1. பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
2. வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான்.
3. மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:
4. நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள்; நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
5. மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.
6. பதினோராம் மணிவேளையிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
7. அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
8. சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.
9. அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
10. முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
11. வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:
12. பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13. அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?
14. உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.
15. என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
16. இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

மத்தேயு 21

இரண்டு குமாரர் உவமை

28. ஆயினும், உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
29. அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.
30. இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
31. இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
32. ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.

திராட்சைத்தோட்டக்காரன் உவமை

33. வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
34. கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
35. தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
36. பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
37. கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
38. தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
39. அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள்.
40. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.
41. அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.
42. இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?
43. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
45. பிரதான ஆசாரியரும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
46. அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

மத்தேயு 22

கல்யாண விருந்து உவமை

1. இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
2. பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
3. அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.
4. அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
5. அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.
6. மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
7. ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
8. அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.
9. ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
10. அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டுவந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.
11. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
12. சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டார்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
13. அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
14. அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.

மத்தேயு 25

பத்துக்கன்னிகைகள் உவமை

1. அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.
2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.
3. புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
4. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
5. மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
6. நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.
7. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
8. புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
9. புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
10. அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
11. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
12. அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13. மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

தாலந்து உவமை

14. அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
15. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.
16. ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம்பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
17. அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
18. ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
19. வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.
20. அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
22. இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
23. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
24. ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
25. ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
26. அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
27. அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,
28. அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
29. உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
30. பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
← முகப்பு பக்கம்